LATEST NEWS
அவருக்கு வயசாகிடுச்சி.. அடிக்கிறதா இருந்தா என்ன அடியுங்க… திமுகவினரே ரொம்ப வருத்தப்படுறாங்க… ஆத்திரத்தில் பொங்கிய துரை வைகோ.. பின்னணி என்ன..??
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனது தந்தை வைகோவின் வயது மூப்பு மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விமர்சனங்களுக்கு ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சற்று உணர்ச்சிவசப்பட்டும், பதற்றத்துடனும் காணப்பட்டார். குறிப்பாக, புத்தக வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிவகுமாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் கோபமாகப் பதிலளித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளாகின.
இதனை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் 84 வயதான வைகோவைக் கேலி செய்யும் விதமாகப் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வந்தன. இந்த விவகாரம் குறித்து நவம்பர் 25 அன்று திருச்சியில் விளக்கமளித்த துரை வைகோ, 84 வயதாகும் தனது தந்தைக்கு வயது மூப்பு காரணமாகச் சற்று மறதி இருப்பது இயல்பானது என்றும், அவர் பேசுவதையெல்லாம் தான் முழுமையாக நியாயப்படுத்தவில்லை என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலுக்காக நீண்ட காலம் உழைத்த ஒரு மூத்த தலைவரை இவ்வாறு சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவதைப் பார்த்து பல திமுக உறுப்பினர்களே மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வைகோவின் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களை வெட்டி ஒட்டி, உண்மைக்குப் புறம்பாகத் தவறாகச் சித்தரித்து இணையத்தில் பரப்புவதாக துரை வைகோ ஆத்திரத்துடன் சாடினார். அரசியல் ரீதியாக விமர்சிக்க வேண்டுமென்றால் வயதான வைகோவை விட்டுவிட்டுத் தன்னை நேரடியாக விமர்சிக்குமாறு சவால் விடுத்த அவர், “அடிப்பது போல் தெரிந்தால் தாராளமாக என்னை அடியுங்கள், நான் பதில் சொல்கிறேன்” என்று செய்தியாளர்கள் மத்தியில் உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.
