LATEST NEWS
“கொள்கையாவது.. கொய்யாக்காயாவது..” கவர்னர் காலில் விழும் திமுக.. உதயநிதி சந்திப்பை ஒற்றை வரியில் வச்சு செய்த தவெக..!!
சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதும், மனு அளிக்க வந்த நபரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் அர்லேகரை சட்டமன்றத் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். இதனை தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதற்கு?” என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய கவர்னர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.
ஆட்சியில் இருந்தவரை கவர்னரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது “ஆபத்பாந்தவனே” என்று கவர்னரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர். “கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை” என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.
பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான். அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
