LATEST NEWS
வலிக்கு ஊசி போடப் போனவருக்கு விபரீதம்.. உடலுக்குள்ளேயே ஊசியை உடைத்துவிட்டு மறைத்த மருத்துவர் – எக்ஸ்-ரேயில் வெளியான அதிர்ச்சி..!!
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள ஃபிங்கேஷ்வர் சமூக நல மையத்தில், மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளியின் உடலுக்குள் ஊசி உடைந்து போன அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பர்சாதகலா பகுதியைச் சேர்ந்த மன்ஹர்தாஸ் என்பவர் கை, கால் வலிக்காக அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றபோது, மருத்துவர் ஊசி போட்ட நிலையில் ஊசி உடலுக்குள்ளேயே உடைந்துள்ளது. ஆனால், இந்த விவரத்தை நோயாளியிடம் தெரிவிக்காமல் மருத்துவர் சாதாரணமாக மருந்துகளை மட்டும் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டிற்குச் சென்ற பிறகு மன்ஹர்தாஸுக்கு கை, கால் வலி குறைந்தாலும், புதிதாகக் கடுமையான முதுகுவலி ஏற்படத் தொடங்கியது. 15 நாட்களாகியும் வலி குறையாததால் மீண்டும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றபோது, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. அந்தப் பரிசோதனையில்தான், 15 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட ஊசி உடைந்து நோயாளியின் உடலுக்குள்ளேயே சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது அந்த உடைந்த ஊசியை அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டிலும் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் மன்ஹர்தாஸ் மற்றும் அவரது உறவினர்கள், மருத்துவமனை முன்பு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற அலட்சியப் போக்கு அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டிய உறவினர்கள், சுகாதாரத் துறை இதற்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
