CRIME
“மனிதாபிமானம் செத்துவிட்டதா..?” திருமண ஊர்வலத்தால் 1 மணி நேரம் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்… கண்முன்னே மனைவியைப் பறிகொடுத்துக் கதறும் கணவர்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் – பரேலி நெடுஞ்சாலையில் திருமண ஊர்வலத்தால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் கல்லீரல் நோயாளியான இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கிரண் என்ற பெண்ணை, அவரது குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பரேலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் அமைந்துள்ள ‘பேர்ல் மேரேஜ் லான்’ என்ற திருமண மண்டபத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய பார்க்கிங் வசதி இல்லாததால், திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்கள் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதோடு மட்டுமல்லாமல், திருமண ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் நடுரோட்டில் நின்று நடனமாடிக் கொண்டிருந்ததால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் கடும் நெரிசலில் சிக்கிக் கொண்டது. உயிருக்குப் போராடும் நோயாளி உள்ளே இருப்பதாகக் கூறி குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும், திருமணக் கூட்டத்தினர் நடனமாடுவதை நிறுத்தாமல் ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நெரிசலில் சிக்கித் தவித்ததால், பரேலி மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கிரணை அழைத்துச் செல்ல முடியாமல் போனதாகவும், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது கணவர் பூபேந்திரா கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி காவல் நிலையப் பொறுப்பாளர் ராகேஷ் கோன், திருமண ஊர்வலம் தொடங்கியதிலிருந்து காவல் சாவடியைக் கடக்கும் வரை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தச் சாலையில் போக்குவரத்து முடங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். மனிதநேயமற்ற இந்தச் செயலால் தனது மனைவியின் உயிர் பறிபோனதைத் தொடர்ந்து, உரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தாத திருமண மண்டப உரிமையாளர் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி கிரணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
