CRIME
“ஐயோ தீப்பிடித்துவிட்டது..!” எனக் கேட்ட அடுத்த நொடியே பதறியடித்து ஜன்னல் வழியே கீழே குதித்த பயணிகள்.. இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்.. கோசி எக்ஸ்பிரஸில் வெடித்த பகீர் பரபரப்பு..!!
பீகார் மாநிலத்தில் கோசி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால் பயணிகளிடையே கடும் பீதியும் கூட்ட நெரிசலும் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்சார்பாக் மற்றும் பாட்னா சாஹிப் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, பெட்டியில் தீப்பிடித்துவிட்டதாகத் திடீரெனத் தகவல் பரவியது. இதனைக் கேட்ட பயணிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பதற்றத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கியதால், ரயில் பெட்டிகளுக்குள் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கூட்ட நெரிசல் போன்ற சூழல் உருவானது.
பீதியின் உச்சத்திற்குச் சென்ற சில பயணிகள், எதையும் யோசிக்காமல் ஓடும் ரயிலின் ஜன்னல்கள் வழியாகக் கீழே குதித்துத் தப்பிக்க முயன்றனர். திடீரென ஏற்பட்ட இந்தக் குழப்பத்தால் ரயிலில் பயணித்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் அச்சத்தில் உறைந்து போயினர். ரயில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் உடனடியாகப் பெட்டிகளுக்குள் சோதனை நடத்தினர்.
ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட தீவிரச் சோதனையில், ரயிலில் எந்தவிதத் தீ விபத்தும் ஏற்படவில்லை என்பதும், யாரோ கிளப்பிவிட்ட வெறும் வதந்தியே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் முற்றிலும் தவறானது என அறிவிக்கப்பட்ட பிறகே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்; ரயில்களில் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
