CRIME
“உங்க சொந்தக் குழந்தையாக இருந்திருந்தால்…?” ததியா விபத்தில் மகனை இழந்த தாயின் நெஞ்சை உலுக்கும் கேள்வி.. வைரலாகும் கண்ணீர் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஷீத்லா மாதா கோவில் அருகே நிகழ்ந்த கொடூரமான லாரி விபத்தில் 15 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டாப்ராவிலிருந்து நெல் ஏற்றி வந்த லாரி ஒன்று, சினாரிலிருந்து கோவிலுக்குச் செல்லும் சரிவில் நிறுத்தப்பட்டிருந்தபோது, திடீரென பிரேக் அழுத்தம் குறைந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சரிவில் வேகமாகச் சறுக்கியுள்ளது. இந்த லாரி அங்கிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து, அவர்களை நசுக்கியவாறு கோவிலின் பிரதான நுழைவாயில் வரை சென்று நின்றுள்ளது. இந்த விபத்தில் 2 ஊர்க்காவலர்கள் உட்பட சுமார் 39 பேர் படுகாயமடைந்து ஜெயரோக்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தில் தன் மகனை இழந்த திவ்யான்ஷின் தாய், காவல்துறை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்துக் கதறி அழுதுள்ளார். விபத்து நடந்த பிறகு தன் மகனைத் தேடச் சென்ற தன் மகளைக் காவல்துறை தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சாட்டிய அவர், “இது உங்கள் சொந்தக் குழந்தையாக இருந்திருந்தால் இந்த வலி உங்களுக்குத் தெரிந்திருக்கும்,” என வேதனையோடு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்த மற்றொரு நபர், தன் சகோதரன் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது லாரி நேராக வந்து மோதியதில் அவர் உயிரிழந்த துயர சம்பவத்தைக் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நிர்வாகம் மற்றும் மருத்துவமனை மேலாண்மைக் குழுவின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதிகாலை 2 மணிக்கு விபத்து நடந்தும், காயமடைந்தவரை அதிகாலை 4 மணிக்கே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை மறைத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகப் பொய் கூறி ஏமாற்றியதாகவும், தற்போது ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் கூறி அவர்கள் தங்களின் ஆத்திரத்தையும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
