LATEST NEWS
திடீர் ரெட் அலர்ட்..! சதுரகிரி மலையேற அதிரடி தடை… கேட் முன்பே கற்பூரம் ஏற்றி சுந்தர மகாலிங்கத்தை வழிபட்ட பக்தர்கள்..!!
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்ததால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இன்று ஐப்பசி மாத பவுர்ணமி நாள் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறக் காத்திருந்தனர். காலை நேரத்தில் வனத்துறையினர் பக்தர்களை அனுமதிக்கலாமா என ஆலோசித்து வந்த நிலையில், திடீரென காலை 6 மணிக்கு மேல் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் மீண்டும் மழை பெய்தது. மேலும், வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருப்பதன் காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை இன்று மலையேற தடை விதித்தது.
பவுர்ணமி நாளில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், வனத்துறை கேட் முன்பு கற்பூரம் மற்றும் பத்தி கொளுத்தி சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை மட்டும் செலுத்திவிட்டுச் சென்றனர். இதற்கிடையே, இன்று இரவில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் இன்றி கோயில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படவுள்ளது.
