LATEST NEWS
அதிர்ச்சி..! பயணியால் பேருந்திலிருந்து தள்ளப்பட்ட பெண் நடத்துநர் மரணம்.. பெரும் சோகம்..!!
தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 25 அன்று அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு மீதிப் பணம் தொடர்பான தகராறு ஏற்பட்டது. அப்போது மௌனிகா என்ற பயணி தள்ளியதில், பெண் நடத்துநரான பிரவலிகா பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த பத்து மாதங்களுக்கு முன்புதான் பிரவலிகா இப்பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த எதிர்பாராத மரணம் சக அரசுப் பேருந்து ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், நடத்துநர்களுக்குப் பாதுகாப்பு கோரியும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் தற்போது தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த பிரவலிகாவின் குடும்பத்தினரை அமைதிப்படுத்தும் வகையில் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரவலிகாவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், உரிய நிவாரண இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
