LATEST NEWS
கவனமா இருங்க… பால், மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வையுங்கள்..! அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. சென்னையில் நேற்று மாலை வெளுத்து வாங்கிய கனமழை தொடர்ந்து பல மணிநேரம் பெய்து, நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று சென்னையில் 6 இடங்களில் அதிகனமழை பெய்த நிலையில் இன்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மீட்புப்படையின் 3 மீட்புக்குழுக்கள் சென்னைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி, தேசிய பேரிடர் மீட்புப்படை சென்னைக்கு விரைந்துள்ளது. ஒவ்வொரு மீட்புக்குழுவிலும் தலா 30 வீரர்கள் என மொத்தம் 90 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறைக்கான அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கான அறிவுறுத்தலை வெளியிட்டார். வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். குழந்தைகளுக்கு தேவையான பால், முதியவர்களுக்கு தேவையான மருந்துகளை முன்பே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். சென்னையில் பெய்த அதி கனமழையால் இதுவரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. 31 செ.மீ. மழை பெய்தபோதும் கூட மழைநீர் தேங்கவில்லை என்றார். மழை தொடர்பான பழைய காட்சிகளை வெளியிட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்க வேண்டாம் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர், மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. மழை தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் 1.40 லட்சம் பேர் ஈடுபட்டு உள்ளனர். என்.ஜி.ஓ.க்கள், அலுவலர்கள், மக்கள் என அனைவரும் இணைந்து பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
