LATEST NEWS
பாத்திரம் கழுவ சென்ற தாய்…! கழிவறையில் காத்திருந்த எமன்… ஒரு வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேன். மீனவரான இவருடைய மனைவி வின்சி. இந்த தம்பதியருக்கு ஹெலைனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் தாய் வின்சி தனது பச்சிளம் குழந்தைக்கு மதிய உணவு ஊட்டியுள்ளார். அதன் பிறகு சமையல் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்காக அவர் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் வீட்டிற்குள் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹெலைனா, எதிர்பாராதவிதமாகக் குளியலறைக்குள் சென்றுள்ளது.
அங்கு நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளிக்குள் நிலைதடுமாறி அந்தக் குழந்தை தலைகீழாகத் தவறி விழுந்துள்ளது. சிறிது நேரம் கழித்து பாத்திரங்களைக் கழுவி முடித்துவிட்டு உள்ளே வந்த தாய், குழந்தையைக் காணாமல் பதறிப்போய்த் தேடியுள்ளார். அப்போது குளியலறைக்குச் சென்று பார்த்தபோது, வாளித் தண்ணீரில் குழந்தை மூழ்கிக் கிடப்பதைக் கண்டு உறைந்து போனார். உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
