LATEST NEWS
‘நம்ம அரசு நம்ம கையில்’..சாதி சான்றிதழ் வாங்க புது ரூட்.. தமிழக அரசின் அதிரடி டிஜிட்டல் புரட்சி!
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைவதைத் தவிர்க்கும் வகையிலும், காலதாமதமின்றி விரைவாகச் சேவைகளைப் பெறும் நோக்கிலும், தமிழ்நாடு அரசு ‘நம்ம அரசு நம்ம கையில்’ என்ற புதிய வாட்ஸ்அப் சேவை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 20 முக்கியமான அரசுத் துறைகளைச் சேர்ந்த 66 வகையான சேவைகள் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் எங்கும் செல்லாமல், தங்களது இருப்பிடத்திலிருந்தே மிக எளிய முறையில் தேவையான உதவிகள் மற்றும் சான்றிதழ்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் நல்வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், தங்கள் மொபைல் போனில் 7845252525 என்ற அதிகாரப்பூர்வ எண்ணைச் சேமித்து, வாட்ஸ்அப் செயலி மூலம் ‘வணக்கம்’ அல்லது ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதன்பின் தோன்றும் மொழிகளுக்கான ஆப்ஷனில் தமிழ் அல்லது ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்து, நமக்குத் தேவையான துறையைக் குறிப்பிட்டால் அதற்கான வழிகாட்டுதல்கள் உடனுக்குடன் திரையில் தோன்றும். இதன் மூலம் பிறப்பு, இறப்பு, வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ்களைப் பெறுவதுடன், மின் கட்டணம் மற்றும் உள்ளாட்சி வரிகளையும் செலுத்த முடியும்; மேலும், ஏற்கனவே விண்ணப்பித்த கோப்புகளின் தற்போதைய நிலையையும் (Application Status) இதிலேயே சுலபமாகக் கண்காணித்து அறிந்துகொள்ளலாம்.
