LATEST NEWS
“2500 குடு.. TTE வந்தா நான் பாத்துக்கிறேன்..!” ஏசி கோச்சில் பகிரங்கமாக லஞ்சம் வாங்கிய ரயில்வே ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கூடுதல் வருமானத்திற்காகப் பயணிகளிடம் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் அவ்வப்போது கேமராவில் சிக்கி வருகின்றன. அந்த வகையில், பீகாரில் இருந்து டெல்லி செல்லும் ஒரு ரயிலின் ஏசி பெட்டியில் பணிபுரியும் அட்டெண்டன்ட் பிரசாந்த் குமார் என்பவர், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருந்த பயணிகளிடம் சீட் தருவதற்காக ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தான் வீடியோ பதிவு செய்யப்படுவதைக் கூட அறியாமல் அந்த ஊழியர் பகிரங்கமாகப் பேரம் பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், கதவின் அருகில் அமர்ந்திருந்த பயணிகளிடம் வரும் அட்டெண்டன்ட், ரூ. 2,500 கொடுத்தால் டெல்லி வரை எந்தச் சிரமமும் இன்றி நிம்மதியாக அமர்ந்து செல்ல முழு சீட் தருவதாகக் கூறுகிறார். ஆனால், தொகையைக் குறைப்பது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது தனது பணியின் கஷ்டங்களைக் கூறும் ஊழியர், “பயண வழியில் மொத்தம் 5 டி.டி.இ அதிகாரிகள் வருவார்கள், அவர்கள் அனைவரையும் நான் சமாளிக்க வேண்டும்; ரூ. 2,500-க்குக் குறைவாக வாங்குனால் எனக்கு எதுவும் மிஞ்சாது” என்று கூறுகிறார்.
மேலும், தன்னிடம் பணம் கொடுத்து சீட் வாங்கிய பிறகு டி.டி.இ வந்து தொந்தரவு செய்யமாட்டார் என்றும், டி.டி.இ அதிகாரிகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர், அந்த ஊழியர் தான் ஏதோ ரயில்வே அமைச்சர் போல நடந்துகொள்வதாக நையாண்டி செய்து, ரயில்வே நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த பயனர்கள் சிலர், ‘ரூ. 2,500 வாங்கினாலும் சீட்டாவது தருகிறாரே, ஐ.ஆர்.சி.டி.சி பணம் வாங்கிக்கொண்டும் டிக்கெட் தருவதில்லை’ என்று கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
