LATEST NEWS
இது அரசா? இல்லை தரிசா?.. தவெக அரசை நோக்கி சீமான் வீசிய அணு குண்டு கேள்வி.. அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அல்லும் பகலும் அயராது உழைத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாமல், மழையில் நனையவிட்டும் கோடையில் தீயில் கருகவிட்டும் வீணடிப்பது விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும் என்று சாடியுள்ளார். மேலும், ஒரே வயலில் விளையும் நெல்லில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசிடம் கொள்முதல் நிலையங்கள் மற்றும் வாணிபக் கழகக் கிடங்குகளுக்குப் போதுமான கட்டிட வசதிகள் இல்லாததே இந்த அவல நிலைக்கு முதன்மைக் காரணம் என்று விமர்சித்துள்ள சீமான், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க ஒரு தகரக் கூரையைக்கூட அரசால் அமைக்க முடியாதா என்று சாடியுள்ளார். உணவுத் தானியங்களைக்கூடப் பாதுகாத்துத் தரமாக வழங்க முடியாதென்றால் அது அரசா அல்லது தரிசா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, முந்தைய ஆட்சிக்கால அலட்சியப் போக்கைத் தொடராமல், விவசாயிகள் விளைவிக்கும் உணவுத் தானியங்களைச் சேமிக்கப் போதுமான நிரந்தரக் கட்டிடங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்குத் தரமான அரிசியை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்றும் தவெக அரசைச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
