LATEST NEWS
தாம்பரம் டூ செங்கல்பட்டு… இனி ‘ரெக்கை’ கட்டி பறக்கலாம்…! ரூ .713 கோடியில் ரெடியாகும் 4-வது டிராக்..!!
தெற்கு ரயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரயில்வே வாரியம் 3 முக்கிய ரயில் பாதை திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களை மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, புதிய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தெற்கு ரயில்வே மிக விரைவில் தொடங்க உள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியில் எப்போதும் மிக அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்டுள்ள தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக, 713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4-வது புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இது தவிர, அரக்கோணம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 929 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு – கரூர் வழித்தடத்தில் 934 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த 3 முக்கிய திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
தெற்கு ரயில்வேயில் தினசரி சுமார் 1,400 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் 152.75 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரயில்வே துறைக்கு 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தற்போது திருச்சி, மதுரை மற்றும் கேரள மாநில கோட்டங்களிலும் புதிய ரயில் பாதை பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. இந்த விரிவாக்கப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் போது, வரும் 2030-ஆம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையை விட 50 சதவீதம் கூடுதலாக ரயில்களை இயக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
