LATEST NEWS
“ஆதாரத்தோடு பேசுங்க… எந்த ஆபீஸ்ல கட்டிங் கொடுத்தாங்க…?” அமைச்சர் நிர்மல் குமாருக்கு.. முன்னாள் அமைச்சர் மூர்த்தி விடுத்த அதிரடி சவால்..!!!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. ஆட்சியில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மல் குமார், கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் பெரும் மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் மூர்த்தி, பழனி கோவிலுக்குச் சொந்தமான நில மோசடி விவகாரத்தில் அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் கோவில் இடங்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம் இருக்கும்போது அது எப்படிப் பதிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். ஒரு குறிப்பிட்ட பதிவாளரை இடமாற்றம் செய்துவிட்டு இந்த மோசடிப் பதிவு அரங்கேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் நிர்மல் குமார் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தோடு பேச வேண்டும் என்று சவால் விடுத்த மூர்த்தி, தனது ஆதரவாளர்களை எந்தவொரு அலுவலகத்திலும் தவறான பத்திரப்பதிவு செய்ய தான் பணிக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். தமிழ்நாட்டிலுள்ள 589 பத்திரப்பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் தனக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அமைச்சர் நிரூபிக்க வேண்டும் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் ஒழிக்கப்படும் எனக் கூறிவிட்டு, கடந்த சில மாதங்களில் மட்டும் பத்திரப்பதிவு மற்றும் நகராட்சி அலுவலக சோதனைகளில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு தற்போதைய அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சாடினார்.
மேலும், அமைச்சர் நிர்மல் குமார் தன் துறை சார்ந்த மின்சாரக் கட்டண உயர்வு, மின்தடை போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் ஆல் இந்தியா அளவில் தானே நிழல் அமைச்சர் போலப் பேசி திசைதிருப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். தி.மு.க ஆட்சியில் வணிகவரித் துறை வருவாய் 96 ஆயிரம் கோடியிலிருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்ட சாதனைகளைக் குறிப்பிட்ட அவர், கட்சி மாறி வந்த நிர்மல் குமார் 48 ஆண்டுகள் ஒரே கட்சியில் இருக்கும் தன்னை விமர்சிப்பதை விடுத்து, பத்திரப்பதிவுத் துறை புகார்கள் தொடர்பாக குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
