Uncategorized
10 வருஷமா படுக்கையிலேயே முடக்கம்.. ஆனா 300 உயிர்களைக் காப்பாற்றிய ஐதராபாத் பெண்.. மன உறுதி இருந்த எதையும் சாதிக்கலாம்.. நெகிழ வைக்கும் நிஜக் கதை..!!
ஐதராபாத்தைச் சேர்ந்த லட்சுமி நரசம்மா (55) என்ற பெண்மணி, கடந்த 10 ஆண்டுகளாகப் படுக்கையிலேயே முடங்கியிருந்தாலும், தற்கொலை தடுப்பு உதவி மையம் மூலம் 300-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றி மறுவாழ்வு அளித்து வருகிறார். இவரது இந்த நெகிழ்ச்சியான மற்றும் உன்னதமான சேவைப் பயணம் பலருக்கும் பெரும் உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
லட்சுமி நரசம்மாவிற்கு அவரது 20-வது வயதிலேயே ‘முடக்கு வாதம்’ என்ற கடுமையான நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரால் முற்றிலும் நடக்க முடியாமல் படுக்கையிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. உடல் ரீதியான வேதனையோடு, குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடியும் சேர்ந்ததால் அவரே ஒரு கட்டத்தில் தீவிர மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார்.
2024-ஆம் ஆண்டில் அண்டை வீட்டாரின் உதவியால் ‘ஒன் லைப்’ தற்கொலை தடுப்பு உதவி மையத்தில் தொலைபேசி ஆலோசகராக லட்சுமி இணைந்தார். படுக்கையிலிருந்தவாறே தொலைபேசி மூலம் அழைப்பவர்களின் வலிகளைக் கேட்டு அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கி, இதுவரை 300-க்கும் மேற்பட்டோரின் தற்கொலை எண்ணங்களை மாற்றி நல்வழிப்படுத்தியுள்ளார். மக்களின் மன உறுதியே முக்கியம் என்று கருதும் இவருக்கு இவரது குடும்பத்தினர் முழு ஆதரவளித்து வருகின்றனர்.
