LATEST NEWS
“அவர் நீண்ட ஆயுளோட வாழணும்…” மெக்காவில் தலையை மொட்டையடித்து முதல்வர் விஜய்க்காக வேண்டி நின்ற தவெக MLA..!!
இஸ்லாமியர்களின் புனித தளமான சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு சென்றுள்ள மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பதற்காக தான் வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில், அதில் அவர் தனது தலையை மொட்டையடித்து கொண்டு வெள்ளை நிற உடையுடன் மெக்காவில் பிரார்த்தனை செய்வது பதிவாகியுள்ளது.
இந்த பயணம் குறித்துப் பேசிய எம்.எல்.ஏ. முஸ்தபா, இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாகவும், தமிழ்நாட்டில் நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் சிறந்த ஆட்சியை நடத்த தான் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்வர் ஏழை, எளிய மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருவதால், அவர் இன்னும் அதிக ஆண்டுகள் இந்த சாதனைகளைத் தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாமானிய மக்களுக்கு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கோட்பாட்டின்படி ஆட்சி நடத்தி வரும் எங்கள் முதலமைச்சருக்கு, நல்ல ஆரோக்கியத்தையும், மன அமைதியையும், மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் ஆற்றலையும் இறைவன் வழங்க வேண்டும் என்று தான் மெக்காவில் பிரார்த்தனை செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
