LATEST NEWS
“ஏன் கம்மியா கொடுக்கிறீங்க…?” இரவில் முட்புதரில் வாலிபருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!
தூத்துக்குடியில் தங்கிப் பணிபுரிந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உள்ளூரைச் சேர்ந்த 4 நபர்களுடன் இணைந்து புதிய துறைமுகம் பைபாஸ் சாலை அருகேயுள்ள மதுக்கடை ஒன்றில் மது வாங்கியுள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள புதர்மறைவான பகுதிக்குச் சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, தங்களுக்குள் மதுபானத்தைக் குறைவாகப் பகிர்ந்து கொடுத்ததாகக் கூறி அவர்களுக்குள் திடீரெனப் பெரும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் உச்சமடைந்த நிலையில் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து, அருகில் கிடந்த மரக்கட்டைகளால் ராஜேஷ் குமார் சிங்கின் தலையில் கொடூரமாகத் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொடூரக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்பின், கொலையான வடமாநிலத் தொழிலாளியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறை, மிகத் துரிதமாகச் செயல்பட்டு அடுத்த 5 மணி நேரத்திற்குள் கொலையில் தொடர்புடைய சிவபாலமுருகன் (23), ஜேம்ஸ் (25), பூமி (24) மற்றும் இமாம் காசாலி (26) ஆகிய 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
மது போதையில் ஏற்பட்ட சிறு தகராறில் வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் மின்னல் வேகக் கைது நடவடிக்கையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
