LATEST NEWS
“இது பேஷன் பண்ற டைம் இல்லை..!” நீண்ட முடியால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவனுக்கு… ஆட்சியர் போட்ட லைவ் ‘டோஸ்’..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நீண்ட தலைமுடி வைத்திருந்ததால் பள்ளி நிர்வாகம் அவரைப் பள்ளியிலிருந்து நீக்கி மாற்றுச் சான்றிதழை வழங்கியுள்ளது. பாட்டியின் மறைவு காரணமாக 20 நாட்கள் விடுப்பில் சென்றுவிட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்பியபோது, அம்மாணவருக்கு வகுப்பறையில் அனுமதி மறுக்கப்பட்டு டி.சி வழங்கப்பட்டதாகக் கூறி மாணவரின் தாய் அதிகாரிகளிடம் முறையிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர பிரதாப் சிங்கின் ‘மக்கள் குறைதீர்க்கும் முகாமில்’ மாணவரின் குடும்பத்தினர் நேரில் சென்று புகாரளித்தனர். ஆட்சியர் அம்மாணவரிடம் விசாரித்தபோது, நீண்ட முடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட அம்மாணவர், பள்ளி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் தன் முடியை வெட்ட மறுத்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பள்ளி நிர்வாகம் அவரை நீக்கியுள்ளது.
மாணவருக்குப் புத்திமதி கூறிய ஆட்சியர், இது படிப்பிலும் எதிர்காலத்திலும் கவனம் செலுத்த வேண்டிய பருவம் என்றும், பேஷன் செய்வதற்கான நேரம் அல்ல என்றும் அறிவுறுத்தினார். இனிமேல் இதுபோன்று நடக்காது என்றும், உடனடியாக மகனின் முடியை வெட்டிவிடுவதாகவும் பெற்றோர் உறுதியளித்தனர். இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்திடம் பேசி மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
