LATEST NEWS
“ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒருவனுக்கு எதிராக 1000 முட்டாள்கள்…!” சிந்தனைச் செல்வன் தாக்குவது யாரை..? திமுக தொண்டர்களுக்கு பதிலடியா..? அதிரும் தமிழக அரசியல்..!!
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் வன்னியரசு திமுகவை விமர்சிக்கும் வகையில் சட்டசபையில் பேசிவருவது தற்போது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே வார்த்தை போர் மூண்டு வருகிறது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துவருகிறது.
அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; “தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?” என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்: தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும், கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும் – ஆண்டன் செக்கோவ்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.
