LATEST NEWS
திமுகவில் 6 லட்சம் பதவிகள்… GENZ இளைஞர்களைக் களமிறக்க மு.க.ஸ்டாலின் மாஸ்டர் பிளானால் சீனியர்கள் அதிருப்தி – கோஷ்டிப் பூசல் வெடிக்குமா..? தலைமைக்கு புதிய சவால்..!!
திமுகவில் உள்ள சுமார் 6 லட்சம் கட்சிப் பதவிகளுக்கும் உள்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை அதிகளவில் கட்சிக்குள் கொண்டு வந்து, திமுகவைப் புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, தமிழகம் முழுவதும் திமுகவின் 110 மாவட்டக் கழகங்கள் மறுசீரமைக்கப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்சித் தேர்தல் மூலம் புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று திமுக தலைமை கருதுகிறது. இதன் மூலம் கட்சிக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன், திமுக எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஒரு பேரியக்கம் என்பதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் தற்போதைய சூழலில் பெரும் ஆலோசனைகளையும், சில அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த உள்கட்சித் தேர்தல் மீண்டும் நடைபெற்றால் ஏற்கனவே செல்வாக்குடன் இருக்கும் மூத்த நிர்வாகிகளின் ஆதரவாளர்களே மீண்டும் பெரும்பாலான பதவிகளைக் கைப்பற்றக்கூடும் என்ற அச்சமும் கட்சிக்குள் நிலவுகிறது. இதனால் சீனியர் – ஜூனியர் போட்டி உருவாகி, கோஷ்டிப் பூசல் அதிகரிக்கலாம் என்று மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, எந்தவித பெரிய மோதல்களும் இல்லாமல் இளைஞர்களைப் பொறுப்புகளுக்குக் கொண்டு வருவதே தற்போது திமுக தலைமைக்கு முன்னால் உள்ள மிக முக்கிய சவாலாக மாறியுள்ளது.
