CINEMA
“தப்பா எழுதாதீங்க.. கையெடுத்து கும்பிடுறேன்…!” – கே.ராஜன் மரணம் குறித்து பரவும் வதந்திகளுக்கு பிள்ளைகள் அதிரடி பதிலடி…!
தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமான மூத்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான 85 வயது கே.ராஜன் சமீபத்தில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக உடல் கொண்டு வரப்பட்டது. இத்தகைய சூழலில், அவரது மறைவு குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், கே.ராஜனின் மகன்கள் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகளை உடைத்துள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்கப் பேசிய அவரது மகன் சுரேஷ் ராஜன், “அப்பா மறைந்தது ஒட்டுமொத்த சினிமா தொழிலுக்கே ஈடுகட்ட முடியாத பெரும் இழப்பு. அவரைப் போன்ற ஒரு மகா ஜாம்பவானை இனி திரையுலகம் பார்க்க முடியாது. ஆனால், சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அப்பாவின் மரணம் குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அப்பா யாரிடமும் ஒரு பைசா கூடக் கடன் வாங்கவில்லை, யாருக்கும் அவர் பணம் பாக்கி வைக்கவும் இல்லை. தயவுசெய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அப்பாவின் தற்கொலைக்கான அசல் காரணத்தை வெளிப்படுத்தினார். “அப்பா யாருக்கும் கடன் படவில்லை, மாறாகப் பல தயாரிப்பாளர்களிடம் அப்பாவின் பணம் மட்டுமே சுமார் 20 கோடி ரூபாய் வரை சிக்கியுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. பணம் கொடுத்தவர்கள் யாரும் அதைத் திருப்பித் தரவில்லை. இவ்வளவு பெரிய ஜாம்பவான் போன் செய்தும் கூட, சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அவரது போனை எடுத்துப் பேசவில்லை. இந்தத் துரோகத்தாலும், பண இழப்பாலும் கடந்த இரண்டு வருடங்களாக அப்பா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்” என்று குற்றம் சாட்டினார்.
இந்தக் கடுமையான மன அழுத்தம் காரணமாக கே.ராஜனுக்கு ஏற்கனவே மூன்று முறை மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டுள்ளது என்றும், நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்போலோ மருத்துவமனையில் அவருக்குப் ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) கருவி பொருத்தப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் என்றும் பிள்ளைகள் கூறினர். வீட்டிற்கு வந்த பிறகும், பணத்தைத் திரும்பக் கேட்டு அவர் செய்த போன்களை யாரும் எடுக்காததால், மீண்டும் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் தான் அவர் அடையாறு ஆற்றில் குதித்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக யார் யார் பணம் தர வேண்டும் என்கிற பட்டியலையும், அதற்கான ஆதாரங்களையும் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும், விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
