CINEMA
ஆர்ஜே பாலாஜி போட்ட கோடு… சூர்யா காட்டிய ரோடு…! இன்ஃப்ளூயன்சர் ஸ்கேமா? இல்லை நிஜமான வசூல் வேட்டையா…! தியேட்டர்களில் அரங்கேறும் கருப்பு சாமி ஆட்டம்…!
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களைத் தவிர்த்து, ஒரு சில அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மட்டுமே திங்கட்கிழமைகளிலும் பாக்ஸ் ஆபீஸில் வலுவான வசூலைத் தக்கவைத்து வந்தன. ஆனால், தற்போது அந்த வரிசையில் இணைந்து தியேட்டர்களில் வசூல் சுனாமி அலையை ஏற்படுத்தி வருகிறது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம். ஒருபுறம் சூர்யாவின் ஹேட்டர்கள் இத்திரைப்படம் வெறும் இன்ஃப்ளூயன்சர்களின் ஸ்கேம் (Scam) என விமர்சித்து கதறினாலும், நிஜமான அன்பான ரசிகர்களும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் உலகளவில் இப்படத்தைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். கோலிவுட்டுக்கு இப்படியொரு தரமான படம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ஒரு நாள் தாமதமாக வந்தாலும் வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமையான இன்று வரை ‘கருப்பு’ படத்தின் டிக்கெட் புக்கிங் நான்-ஸ்டாப் சாதனைகளைப் படைத்து வருகிறது.
சூர்யா நடிப்பில் இதற்கு முன் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த அளவு சாதனை படைக்கவில்லை என்ற விமர்சனங்கள் பரவலாக இருந்தன. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் வெளியான மூன்றே நாட்களில் ‘கருப்பு’ திரைப்படம் தவிடு பொடியாக்கியுள்ளது. “இப்படம் மூன்று நாட்கள் மட்டுமே ஓடும், திங்கட்கிழமையிலிருந்து இதன் ஸ்கேம் அம்பலமாகி வசூல் சரிந்துவிடும்” என்று கணித்தவர்களின் வாயை அடைக்கும் விதமாக, திங்கட்கிழமையும் தியேட்டர்கள் அனைத்தும் ஆரஞ்சு அலர்ட்டாக (Orange Alert) காட்சியளிக்கின்றன. வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தின் மூலம், தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் முந்தைய கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தீர்ந்துவிடும் என்று சினிமா வட்டாரங்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றன.
வெளியான முதல் மூன்று நாட்களில் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய ‘கருப்பு’ திரைப்படம், உலகளவில் அதிரடியாக 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகி வசூல் சாதனை படைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸைக் கைப்பற்றியுள்ளது. திங்கட்கிழமையான இன்றும் புக் மை ஷோ போன்ற டிக்கெட் புக்கிங் தளங்களில் பல தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகி ஆரஞ்சு நிறத்தில் மின்னுகின்றன. தியேட்டர்களில் கருப்பு சாமியின் மிரட்டலான ஆட்டத்தைக் கண்டு ரசிப்பதற்காக, தங்களது குடும்பங்களுடன் ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
