CINEMA
27 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த தேவயானி…!”பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியது ஏன்? தேவயானி – ராஜகுமாரன் காதலுக்குள் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி பின்னணி…!”
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜகுமாரன் ஆகியோரின் காதல் கதை திரையுலகில் மிகவும் பிரபலமானது. குடும்பத்தினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி, காதலில் உறுதியாக இருந்த தேவயானி வீட்டை விட்டு வெளியேறி ராஜகுமாரனைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் அண்மையில் பாடல்கள் மூலம் பிரபலமாகி, தற்போது கதாநாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநராக ராஜகுமாரன் இயக்கிய ‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ போன்ற திரைப்படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும், இந்தத் திரைப்படங்கள்தான் இவர்களின் காதலுக்கு அடித்தளமாக அமைந்தன. திருமணத்திற்குப் பிறகு இயக்கத்தில் இருந்து மொத்தமாக ஒதுங்கிய ராஜகுமாரன், சந்தானம் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிகராகவும் முகம் காட்டினார். இருப்பினும், அந்தத் திரைப்படத்தில் தனது கணவர் வம்புக்கிழுக்கப்பட்டு, கிண்டல் செய்யப்பட்டதில் தனக்கு சற்றும் உடன்பாடு இல்லை என்று தேவயானி தனது வருத்தத்தை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.
சினிமாவை விட்டு விலகியிருந்தாலும், சமீபகாலமாக ராஜகுமாரன் யூடியூப் சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. முன்னதாக இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் கமல்ஹாசன் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். அதேபோல், அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ‘அமரன்’ திரைப்படத்தை விமர்சித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை தேவயானி தனது கணவர் குறித்து அளித்துள்ள அண்மைப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைப்படமான ‘சூர்யவம்சம்’ படத்தில், நடிகர் மணிவண்ணனை ராஜகுமாரன் கிண்டல் செய்யும் ஒரு நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருக்கும். அதுகுறித்து தேவயானி பேசுகையில், “சூர்யவம்சம் படம் எப்போதுமே மறக்க முடியாத ஒரு எவர்க்ரீன் காவியம். அந்த குறிப்பிட்ட காட்சியில் நடிக்க வேண்டிய நடிகர் அன்று வராததால், உதவி இயக்குநராக இருந்த ராஜகுமாரனே அதில் நடித்தார். என்னால் எப்போதுமே அந்த சீனை மறக்க முடியாது” என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
