CINEMA
“கண்ணாடி வழியா பார்த்துட்டே இருந்தேன், ஆனா…!”இறங்குவதற்கு முன் கார் டிரைவரிடம் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை…!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் (85) அவர்கள், நேற்று மாலை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1983-ல் வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், சினிமா பொது நிகழ்ச்சிகளிலும் யூடியூப் நேர்காணல்களிலும் தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் குறித்து வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசி பிரபலமானவர். எப்போதும் துணிச்சலாகக் குரல் கொடுக்கும் ஒரு நபர், திடீரென இத்தகைய முடிவை எடுத்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கே.ராஜனின் மறைவு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக அவருடன் பயணித்த கார் ஓட்டுநர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். நேற்று மாலை வழக்கம்போல காரில் ரவுண்ட் செல்லலாம் என்று கூறி கூப்பிட்ட கே.ராஜன், பாலம் அருகே வந்ததும் தனக்கு நடைபயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறி காரை முன்னே எடுத்துச் செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஓட்டுநரும் காரை சிறிது தூரம் முன்னால் நகர்த்திவிட்டு, பக்கவாட்டுக் கண்ணாடி வழியாக அவரை கவனித்துக் கொண்டே சென்றபோது, எதிர்பாராத விதமாக அவர் திடீரென ஆற்றுக்குள் குதித்துவிட்டதாக ஓட்டுநர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், காரில் வரும்போது அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அவர் சாதாரணமாகவே இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஐந்து வருடங்களாக தனிமையில் இருந்ததாகவும், குடும்பப் பிரச்சினை மற்றும் பண நெருக்கடி காரணமாகவே உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. ஆனால், இந்த வதந்திகளை அவரது கார் ஓட்டுநரும் உறவினர்களும் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அவர் தனியாக இல்லை என்றும், அவரது மகன்கள் மற்றும் மகள்கள் அவரைத் தொடர்ந்து கவனித்து வந்ததாகவும் உறவினர்கள் விளக்கியுள்ளனர். அவர் எப்போதும் அமைதியையும் தனிமையையும் விரும்பும் குணம் கொண்டவர் என்பதால் மட்டுமே தனியாக வசித்து வந்தாரே தவிர, குடும்பத்தினர் அவரை கைவிடவில்லை என்றும், தினமும் மகள்கள் சமைத்த உணவையே அவர் சாப்பிட்டு வந்ததாகவும் அவரது உறவினர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக கே.ராஜன் தீவிர இதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததே இந்த துயர முடிவுக்கு முக்கியக் காரணம் என்று அவரது உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தான் அவருக்கு ₹12 லட்சம் செலவில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவரால் கடுமையான உடல் வலியையும், தலைப்பாரத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், தூக்கமில்லாமல் தவித்ததாகவும் கூறப்படுகிறது. யாருக்கும் எவ்வித கடனும் இல்லாத நிலையிலும், பிறருக்குக் கொடுத்த ரூ.20 கோடி பணத்தை திரும்பப் பெற முடியாத நிலையிலும் அவர் வாழ்ந்து வந்துள்ளார். தன் உடல் நலக்குறைவால் குடும்பத்தினருக்கு எந்தவித கஷ்டமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே அவர் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
