LATEST NEWS
“என் தாத்தா SI.. அப்படித்தான் ஓட்டுவேன்!”.. 6 வயது பேத்தியை கார் ஓட்ட அனுமதித்த போலீஸ் அதிகாரி.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூஜாரி திரிபாதி. இவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி மாலை, ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான நர்சிங்கி என்ற இடத்திலுள்ள பரபரப்பான கந்தம்குடா – பைராகிகுடா சாலையில் தனது காரில் சென்றுள்ளார். அப்போது, காரின் முன் இருக்கையில் அவர் அமர்ந்திருக்க, அவரது 6 வயது பேத்தி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை மெதுவாக இயக்கியுள்ளார். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மற்ற வாகன ஓட்டிகள் காரை வழிமறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த சிறுமி, “என் தாத்தா எஸ்.ஐ., அதனால் அப்படித்தான் காரை ஓட்டுவேன்” என்று பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து எஸ்.ஐ. திரிபாதி அது தானியங்கி கார் என்றும், அதன் முழு கட்டுப்பாடு தன்னிடம் தான் உள்ளது என்றும் கூறி சமாளித்தபடி ஓட்டுநர் இருக்கைக்கு மாறியுள்ளார். சிறுமி காரை ஓட்டிய இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த வாகன ஓட்டிகளால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக, இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் எஸ்.ஐ. பூஜாரி திரிபாதி மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சட்டவிரோதமாகச் சிறுமி இயக்கிய அந்த காரையும் காவல்துறையினர் உடனடியாகப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
