LATEST NEWS
முதல்வர் விஜய்க்கு வந்த புதிய தலைவலி.. வசூல் வேட்டையில் இறங்கிய அமைச்சர்களின் பிஏக்கள்?”.. கோட்டை வட்டாரத்தை அதிரவைத்த அந்த ரகசிய ரிப்போர்ட்..!!
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், சில அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடான வசூலில் ஈடுபட முயல்வதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் செலவுகள் மற்றும் எதிர்கால அரசியல் சூழலைக் காரணம் காட்டி, பணியிட மாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் அரசு ஒப்பந்தங்களில் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்குமாறு இந்த பிஏக்கள் அமைச்சர்களையே தவறான முடிவுகளுக்குத் தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. எளிய பின்னணியில் இருந்து வந்து முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், “மக்கள் பணத்தைத் தொடவும் விடமாட்டோம்” என்ற முதல்வர் விஜயின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்திற்கு முரணாக இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த முறைகேடு விவகாரம் முதல்வரின் கவனத்திற்குச் சென்றால் கடுமையான நடவடிக்கை பாயும் என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, தப்பியோட என்ன வழி என்ற ஆலோசனைகளும் ஒருபுறம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமைச்சர்களின் அலுவலகச் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தமிழக வெற்றிக் கழக தலைமை தனிப்பட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றையும், சில மூத்த அமைச்சர்கள் இதற்கெனத் தனி குழுவையும் செயல்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த வசூல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் என்றும், இதில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் தவெக நிர்வாகிகள் இப்புகார்களை முழுமையாக மறுத்துள்ளனர். அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் தரப்படாததால், இதன் உண்மைத் தன்மை குறித்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
