LATEST NEWS
யாரு செஞ்ச வேலைடா இது..? அரசுப்பேருந்து ரூட் போர்டில் ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்… சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ..!!!
சென்னையில் அரசு மாநகரப் பேருந்து ஒன்றின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது. சென்னை அடையார் பணிமனையிலிருந்து செம்மஞ்சேரி வழியாக இயக்கப்பட்ட 119 எண் கொண்ட மாநகரப் பேருந்தின் டிஜிட்டல் பலகையிலேயே மர்ம நபர்கள் இந்த நூதன மாற்றத்தைச் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) இதற்கு உடனடியாக அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தங்களது கைவரிசையால் பேருந்தின் வழித்தடப் பலகையில் இந்த மாற்றத்தைச் செய்திருந்ததாகவும், அது கவனத்திற்கு வந்தவுடனேயே சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்கள் உஷார்படுத்தப்பட்டு பெயர் பலகை உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் எம்.டி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/Dbr9xQGIPII/?utm_source=ig_web_button_share_sheet
வைஃபை (Wi-Fi) தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இத்தகைய டிஜிட்டல் போர்டுகளின் இயல்புநிலை கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் மொபைல் செயலிகள் மூலம் இதனை மாற்றியிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வருங்காலங்களில் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளோ அல்லது தேவையற்ற குழப்பங்களோ பொதுவெளியில் மீண்டும் அரங்கேறாத வண்ணம், தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத் துறை உறுதியளித்துள்ளது.
