LATEST NEWS
“காப்பாத்துங்க… அண்ணன்-தங்கையை கொடூரமாகக் கொன்ற பெண் கரடி… 4 மணி நேரம் உடல்களைத் தின்ற பயங்கரம்..! சத்தீஸ்கர் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள மார்கடோலா கிராமத்தில், பெண் கரடி ஒன்று தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்தனர். வயல்வெளியின் அருகே அமர்ந்திருந்த ஹலால் கோர் ஜூரி என்பவரைப் பெண் கரடி திடீரெனத் தாக்கியது. அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, பள்ளியில் சமையலராகப் பணியாற்றிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரது சகோதரி சமாரோன் பாய் அவரைக் காப்பாற்ற ஓடிவந்தார். ஆனால், கரடி அவரையுத் கொடூரமாகத் தாக்கியதில் இருவருமே உயிரிழந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு சகோதரியான கோரின்பாய் என்பவரும் கரடியின் தாக்குதலில் படுகாயமடைந்து, காங்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலுக்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்களின் அருகிலேயே அந்தப் பெண் கரடி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்தது. யாராவது உடல்களை மீட்க அருகே செல்ல முயன்றால் அவர்களைத் தாக்கப் பாய்ந்தது. தகவல் அறிந்து ராய்ப்பூரில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை நிபுணர் குழு, மயக்க ஊசி செலுத்தி கரடியை மயக்கமடையச் செய்தது. அதன்பின்னரே உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தடிகளுடன் கரடியைத் தாக்க முற்பட்டபோது, காவல்துறையினரும் வனத்துறையினரும் அவர்களைச் சமாதானப்படுத்தி கரடியைக் கூண்டில் அடைத்து எடுத்துச் சென்றனர்.
சம்பவத்திற்கு முந்தைய நாள், அந்தப் பெண் கரடி தனது சொந்தக் குட்டியைக் கடித்துக் கொன்றதாகவும், வனத்துறையினர் அந்தக் குட்டியின் உடலைக் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தன் குட்டியைக் காணாததால் கடும் ஆத்திரமும் ஆக்ரோஷமும் அடைந்த பெண் கரடி, கண்ணில் பட்ட மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கிராம மக்களும் வனத்துறையினரும் தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
