LATEST NEWS
இப்படியும் ஒரு நட்பா..?! 28 கோடி சொத்தை நண்பனுக்கு கொடுத்த சீன இளைஞன்…! பெற்றோரை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த அதிர்ச்சி பின்னணி..!!
19 வயதே ஆகும் லி என்ற இந்த இளைஞனுக்கு அட்வென்ச்சர் மற்றும் அதீத ஆபத்துகள் நிறைந்த ‘எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ்’ விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உண்டு. இத்தகைய விளையாட்டுகளின் போது எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், தான் சம்பாதித்த பணமும், ஷாங்காயில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வங்கிச் சேமிப்பு உள்ளிட்ட சொத்துக்களும் தகுதியான நபரிடம் சேர வேண்டும் என்று கருதி, முன்கூட்டியே உயில் எழுத முடிவு செய்தார்.
தன் பெற்றோருக்கு ஒரு பைசா கூட தராமல் நண்பனுக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததற்குப் பின்னால் ஒரு குடும்பப் பிரிவு காரணம் இருக்கிறது. லியின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து பெற்று, தங்களுக்கு என்று தனித்தனியாக வேறு திருமணங்களைச் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் புதிய வாழ்க்கைத் துணைகளைத் தனது குடும்பத்தினராக ஏற்றுக்கொள்ள லி விரும்பவில்லை. மேலும், தனது மரணத்திற்குப் பிறகு தனக்குச் சம்மந்தமில்லாத நபர்களுக்குத் தன் சொத்து போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் தனக்குத் தோள் கொடுத்த சிறுவயது நண்பனை மட்டுமே அவர் முழுமையாக நம்பினார்.
சீன சட்டப்படி ஒருவர் திருமணமாகாமல், குழந்தைகள் இல்லாமல் இறந்துபோனால் அவரது சொத்துக்கள் பெற்றோரையே சேரும். ஆனால், தனிநபர் ஒருவர் தனது விருப்பப்படி உயில் எழுதினால் குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் எவருக்கும் சொத்தை வழங்க முழு உரிமை உண்டு. அதன்படி, லி தனது உயிலை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். சீனாவின் தற்போதைய தரவுகளின்படி, கடந்த காலங்களை விட இப்போது 1980, 1990 மற்றும் 2000-க்குப் பிறகு பிறந்த சீன இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் மற்றும் சொத்துக்கள் குறித்து விழிப்புணர்வுடன் மிகக் குறைந்த வயதிலேயே உயில் எழுதும் பழக்கத்தை அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
