LATEST NEWS
“நள்ளிரவு 12 மணி டார்கெட்!”.. தாஜ் ஹோட்டல் தகர்க்கப்படுமா?.. மும்பை போலீசாருக்கு வந்த மர்ம போன் கால்.. மும்பையில் பெரும் பரபரப்பு..!!
உலகப் புகழ்பெற்ற மும்பை தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை போலீசாருக்கு வந்த மர்மத் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை முடுக்கிவிடப்பட்டு ஹோட்டல் முழுவதும் அங்குல அங்குலமாக சோதிக்கப்பட்டது. பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள தாஜ் ஹோட்டலைச் சுற்றி பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலின் பின்னணியில் இருப்பவரைக் கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதால், அப்பகுதியில் ஒருவித பதற்றமும் பீதியும் தொற்றிக்கொண்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று (26/11) பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இந்த தாஜ் ஹோட்டலில் புகுந்து 6 குண்டுகளை வெடிக்கச் செய்து கொடூரத் தாக்குதல் நடத்தினர். 1903-இல் ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது கூட மூடப்படாமல் மருத்துவமனையாகச் செயல்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோட்டல், அந்தத் தாக்குதலின் போதுதான் முதன்முறையாக மூடப்பட்டது. தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG) ‘ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ’ மூலம் 9 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்று 200-க்கும் மேற்பட்ட பிணையக் கைதிகளை மீட்ட போதிலும், 3 நாட்கள் நீடித்த இந்த கொடூரத் தாக்குதலில் தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் 11 பேர் உட்பட மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
