LATEST NEWS
லயோலா மணி மேடையில் தரம்தாழ்ந்து பேசினாரே அப்போ ஏன் கைது பண்ணல..? மேடைப் பேச்சுக்கெல்லாம் எடுத்த எடுப்பிலேயே கைது செய்வதா..? சீமான் காட்டம்..!!
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்பு காட்டி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்துச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலோ குறுவை சாகுபடி பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உரிய முன்னெடுப்புகளைச் செய்யவில்லை. மக்களுக்குத் துளியும் நலன் பயக்காத வறட்டுத்தனமான அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் காவிரிப் பிரச்சினையிலிருந்து தவெக அரசு திசைதிருப்பி உள்ளதாகச் சீமான் சாடியுள்ளார்.
அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம் எடுத்த எடுப்பிலேயே கைது நடவடிக்கையில் இறங்குவது சனநாயக ஆட்சிக்கோ மாற்று அரசியலுக்கோ அழகல்ல என்றும், இது தவெக அரசின் சகிப்புத்தன்மையற்ற போக்கைக் காட்டுகிறது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் தன் மீதும் தன் தம்பிகள் மீதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ச்சப்பட்ட அதிகார அடக்குமுறையையே தற்போதைய தவெக அரசும் கடைப்பிடிக்கிறது. மேடைகளில் தவறாகப் பேசினால் அவதூறு வழக்குதான் தொடர வேண்டுமே தவிர, கைதில் இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
புகார் அளித்த இரண்டே மணி நேரத்தில் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்த காவல்துறை, தவெக ஆதரவாளரான லயோலா மணி மேடையில் தன்னைத் தரம் தாழ்ந்து விமர்சித்தபோதும், அவர் மீது நீதிமன்றமே சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் இதர தவெக நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டும் இதுவரை விசாரிக்காத அரசு, இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன் என்று முதல்வர் விஜய்க்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
