LATEST NEWS
“தாயாக மாறிய ஆதரவற்ற மூதாட்டி… தனது வீட்டில் 26 ஆண்டுகள் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு… சொந்த செலவில் இந்து முறைப்படி வழியனுப்பிய கிறிஸ்துவ பாதிரியார்..!!”
கேரளாவில் கிறித்தவ மதபோதகர் ஒருவரின் வீட்டில், சுமார் 26 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்த பணிப்பெண்ணிற்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து வழியனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சோட்டாணிக்கரையைச் சேர்ந்தவர் ஓ.ஜே.ஜேக்கப். ஆர்த்தடாக்ஸ் திருச்சபை பாதிரியாரான இவரது மனைவி இறந்த நிலையில், கடந்த 2000-ம் ஆண்டில் தனது 6 வயது மகள் மெரினைப் பராமரிப்பதற்காக பார்வதி என்ற பெண்ணை வேலைக்குச் சேர்த்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையான பார்வதி, அனைவராலும் அன்போடு ‘பாயம்மா’ என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் பாதிரியாரின் மகளுக்கு தாயாகவும், அக்குடும்பத்தின் உறுப்பினராகவே மாறினார்.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பாயம்மா காலமானார். அவருக்குச் சொந்தமாக நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில், அவர் பின்பற்றிய இந்து மத பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் மதிக்கும் வகையில், பாதிரியார் ஜேக்கப் தனது வீட்டிலேயே வேத மந்திரங்கள் முழங்க, விளக்கேற்றி இந்து மத முறைப்படி அனைத்து இறுதிச் சடங்குகளையும் முறைப்படி நடத்தினார். அதன்பின்னர் அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது; மதங்களைக் கடந்து மனிதநேயத்தை உணர்த்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
