LATEST NEWS
“தயவுசெய்து காப்பாத்துங்க” நள்ளிரவில் இந்தியத் தூதரகத்திற்கு உதவி கேட்டு அலறிய பெண் வ்லாகர்.. சிறைபிடித்து தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் திக் திக் நிமிடங்கள்..!!
கேரளாவைச் சேர்ந்த பிரபல டிராவல் வ்லாகரான அருணிமா, தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுக்குத் தனியாகப் பயணம் மேற்கொண்ட போது, அங்குள்ள பாமியான் பகுதியில் தாலிபான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பேக்பேக்கர் அருணிமா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் அவர், முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதி கடிதம் இல்லாமல் தனியாகப் பயணித்ததால் தாலிபான்கள் தன்னைக் கைது செய்துள்ளதாகவும், இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள உதவுமாறும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவசரமாகப் பதிவிட்டிருந்தார்.
அவர் உதவி கோரி பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாக மற்றொரு பதிவை அருணிமா வெளியிட்டுள்ளார். பாமியான் மாகாணத்திற்கு வரும் முன்பாகத் தனக்கு உதவிய ஒரு உள்ளூர் நபரைத் தொடர்புகொண்டு, அவர் மூலமாகத் தாலிபான் அதிகாரிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இனி ஆப்கானிஸ்தானில் பயணம் செய்யும்போது முறையான அனுமதி பெற வேண்டும், கட்டாயம் ஒரு ஆண் வழிகாட்டியுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடனும், அபராதத்துடனும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்யச் சட்டப்படி அனுமதியில்லை என்ற விதியை மீறியதாலேயே தான் கைது செய்யப்பட்டதாகத் தாலிபான் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அருணிமா விளக்கியுள்ளார். தாலிபான் ஆட்சியில் அங்குள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் செல்லத் தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்பதால், தனியாகப் பயணித்த இவருக்குப் பாமியான் மற்றும் ஜலாலாபாத் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்கானிஸ்தான் பயணத்தின் போது தாலிபான்கள் பலமுறை தன்னை வழிமறித்துச் சோதனையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண் பயணிகளுக்கு இல்லாத பல கடுமையான கட்டுப்பாடுகள் தான் ஒரு பெண் என்பதால் தன் மீது திணிக்கப்பட்டதாகவும், இதனால் தனது பாதுகாப்பு கருதி பயணத்தின் பெரும்பாலான பகுதிகளில் ‘பர்தா’ அணிந்தே பயணிக்க வேண்டியிருந்தது என்றும் அருணிமா வேதனையுடன் பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் பெண்களுக்கான மனித உரிமை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியப் பெண் வ்லாகர் ஒருவர் தாலிபான்களிடம் சிக்கி மீண்ட இச்சம்பவம் தற்போது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
