LATEST NEWS
“சில நொடில செத்திருப்பேன்!” நான் பொண்ணுன்னு தெரிஞ்சே இடிச்சாங்க… கார் இடித்து சென்ற சம்பவத்தில் கொதித்தெழுந்த பெண் பைக்கர்…!!
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில், சியா என்ற பெண் பைக் ஓட்டிச் சென்றபோது, பின்னால் வந்த செடான் கார் ஒன்று திடீரென லேன் மாறி வந்து அவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சியா வெளியிட்ட பதிவில், “காரில் வந்த ஆண்கள் என்னை அச்சுறுத்தும் வகையில் பின்தொடர்ந்து வந்து என் மீது மோதினர்; சில நொடிகளில் எனக்கு எலும்பு முறிவோ, மரணமோ கூட ஏற்பட்டிருக்கலாம்” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குருகிராம் காவல்துறை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிய கல்யாண் பைன்ஸ்லா என்பவரை அடையாளம் கண்டுள்ளது.
இருப்பினும், இந்த விபத்துக் குற்றச்சாட்டை மறுத்துள்ள கல்யாண் பைன்ஸ்லாவின் வழக்கறிஞர், தவறு முழுக்க பைக்கர்கள் மீதே உள்ளது என்று எதிர்விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பெண் சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் ஃபாலோவர்களுக்காகவே சர்ச்சையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார் என்றும், அவர் மணிக்கு 140 முதல் 170 கி.மீ. வேகத்தில் பைக்கை ஓட்டி காருக்குத் தொந்தரவு கொடுத்ததாகவும், பொதுமக்களின் கும்பல் தாக்குதலுக்கு அஞ்சியே கார் நிறுத்தாமல் சென்றதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சியா, தான் ஒரு பெண் என்பது தனது தலைமுடியை வைத்தே காரில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றும், தாங்கள் எப்படிச் சென்றிருந்தாலும் தங்களைப் பின்தொடர்ந்து வந்து இடிப்பதற்கு அவருக்கு யார் உரிமை கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வேண்டுமென்றே முதல் லேனில் இருந்து மூன்றாவது லேனுக்கு வந்து மோதியதற்கு இரண்டு வீடியோக்களே சாட்சி எனக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் சியா ஒரு பெண் என்பதாலேயே குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார் என இணையவாசிகள் குருகிராம் நகரப் பாதுகாப்பு குறித்துக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
