LATEST NEWS
அய்யோ கொடுமையே… 4 பசங்கள பெத்து என்ன பிரயோஜனம்..? பெற்ற தாய்க்கு கொள்ளி போட மறுத்த மகன்கள்… 3 நாட்களாக பிணவறையில் காத்திருந்த தாயின் சோகம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மனித உறவுகளை உலுக்கும் வகையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. லதா பாய் என்ற முதிய பெண்மணிக்கு நான்கு மகன்கள் உள்ள போதிலும், அவர் இறந்த பிறகு அவருக்கு இறுதிச்சடங்கு செய்யவோ அல்லது அவரது உடலை வாங்கவோ அவரது பெற்ற மகன்களே மறுத்துவிட்டனர். மூன்று நாட்கள் மகன்களுக்காக காத்திருந்த பிறகு, எந்தவித சொந்த பந்தமும் இல்லாத தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, அந்தத் தாயின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர்.
லதா பாய் தன் வாழ்நாள் முழுதும் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்பு மற்றும் நகைகளை விற்று இந்தூரின் சிலிக்கான் சிட்டி பகுதியில் உள்ள கணேஷ் ரெசிடென்சியில் ஒரு வீட்டை வாங்கினார். ஆனால், அவருடைய மகன்கள் அந்த வீட்டை தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்ட பிறகு, பெற்ற தாயை வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டை இழந்த அந்தப் பாட்டி தெருக்களில் அலைந்து திரிந்த நிலையில், ‘ப்ரீயு ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அஜய் நாக்தா என்பவரின் உதவியால் மீட்கப்பட்டு ‘ஜானகி முதியோர் இல்லத்தில்’ சேர்க்கப்பட்டார். அங்கு சுமார் 8 மாதங்கள் தங்கியிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் எம்.ஒய். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 13 அன்று அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு, பிரம்மகுமாரி ஜோதி தீதி மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் நான்கு மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று நாட்கள் கழிந்தும் எந்த மகனும் மருத்துவமனைக்கோ அல்லது இறுதிச் சடங்கிற்கோ வரவில்லை. இதையடுத்து, சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு, புதன்கிழமை அன்று இந்தூரில் உள்ள ரீஜனல் பார்க் மயானத்தில் இந்து முறைப்படி லதா பாயின் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. பெற்ற மகன்கள் கைவிட்ட நிலையில், அவருக்கு ஆதரவளித்த சமூக ஆர்வலர்களே மகன்களின் கடமையை ஏற்று அவரது இறுதிப் பயணத்தை கண்ணியமாகச் செய்து முடித்தனர்.
