LATEST NEWS
“மதிமுக-வை கலைச்சிட்டு திமுக-வுக்கே வந்துடுறேன்னு..” துரை வைகோவின் ரகசியத்தை மேடையில் போட்டுடைத்த கே.என்.நேரு.. தமிழக அரசியலில் பெரும் புயல்..!!
திமுக மற்றும் மதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே எம்பி பதவி மற்றும் மிசா சட்டம் தொடர்பாகக் கடுமையான கருத்து மோதல் வெடித்துள்ள நிலையில், துரை வைகோ தன்னிடம் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைவதாகக் கூறியதாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அதிரடியாகப் போட்டுடைத்துள்ளார். முன்னதாக, “எனது எம்பி பதவி திமுக போட்ட பிச்சை அல்ல” என்றும், பண்ணையார் மனோபாவத்துடன் தங்களை நடத்தக் கூடாது என்றும் திருச்சி எம்பி துரை வைகோ காட்டமாக விமர்சித்திருந்தார். மேலும், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது அரசியல் காரணங்களால் அல்ல என்றும் அவர் பேசியது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “என்னால் தனியாகக் கட்சி நடத்த முடியாது, எங்க அப்பா கொஞ்சம் கோபக்காரர் என்பதால் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள், நான் திமுகவிலேயே வந்து இணைந்து விடுகிறேன்” என்று துரை வைகோ தன்னிடம் மற்றும் மு.க.ஸ்டாலினிடம் கூறியதாகத் தெரிவித்தார். துரை வைகோ இன்னும் சின்னப் பிள்ளை என்றும், மிசா காலத்தைப் பற்றிப் பேசும் அவருக்கு அப்போது பிறந்திருக்கக்கூட வயது இருக்காது என்றும் சாடினார். நாங்களும் திருப்பிப் பேசத் தொடங்கினால் நிலைமை மாறிவிடும் என அவர் எச்சரித்துள்ளது தமிழகக் கூட்டணி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
