CRIME
“என் மகன்தான் திருடன்..!” காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுக்க சொந்த வீட்டிலேயே 50 லட்சத்தை ஆட்டையப் போட்ட இளைஞர்..! பணத்தை சுருட்டி உல்லாசமாக சுற்றிய வாலிபர் கைது..!!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்தவர் யாஷ் தனுகா. இவரது பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட யாஷ் தனுகா, பெற்றோர் அறையில் இருந்த லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். வெளியூர் சென்று திரும்பிய பெற்றோர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மகன் யாஷ் தனுகாவைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரே இத்திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
போலீசாரின் விசாரணையில், திருடப்பட்ட நகைகளில் சிலவற்றை விற்றுப் பணமாக்கிய யாஷ் தனுகா, அந்தப் பணத்தில் தனது காதலி புபாலி தத்தாவுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி அளித்துள்ளார். மேலும், காதலியுடன் வெளியே சென்று உல்லாசமாகச் செலவு செய்யவும், பார்ட்டி கொண்டாட்டங்களுக்கும் இந்தத் திருட்டுப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளார். யாஷ் தனுகா தனது வீட்டில் திருட்டில் ஈடுபட்டபோது காதலி புபாலி தத்தாவும் அங்கு வந்திருந்தது தெரியவந்துள்ளதால், இத்திருட்டுச் சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இருவரின் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருடப்பட்ட சில தங்க நகைகளை விற்பனை செய்வதற்கு ஜிதேந்திர சோமானி மற்றும் ரோகித் பிரசாத் ஆகிய இருவர் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கோலாகாட் பகுதியில் உள்ள ஒரு கடையில் சில நகைகள் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அந்த நகைகளை மீட்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருடப்பட்ட மீதிப் பணம் எவ்வாறு செலவழிக்கப்பட்டது மற்றும் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் வேறு நபர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
