LATEST NEWS
“அடப்பாவமே..!” பக்தி பரவசத்தில் நகையைக் கழற்ற மறந்துட்டாரு.. விநாயகர் சிலையோடு 1½ பவுன் தங்கச் சங்கிலியையும் ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அதிகாரி.!!
கடலூர் அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும்போது, கவனக்குறைவாக சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62) என்ற ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்து வந்தார். மேலும், அந்த விநாயகர் சிலைக்குத் தனக்குச் சொந்தமான 1½ பவுன் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின் 3-வது நாளான நேற்று காலை 9.30 மணி அளவில், கடலூர் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள உப்பனாற்றுக்குச் சென்று பாலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து இறுதிப் பூஜைகளைச் செய்துள்ளார். அப்போது பக்தி பரவசத்தில் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியை எடுக்க மறந்து, நகையுடன் சேர்த்தே விநாயகர் சிலையை அப்படியே ஆற்றில் வீசியுள்ளார். சிலையைத் தண்ணீரில் வீசிய சில நிமிடங்களுக்குப் பிறகுதான் தங்கச்சங்கிலியைக் கழற்றாமல் வீசிய அதிர்ச்சி உண்மை அவருக்குத் தெரியவந்தது.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இறங்கி நகையைத் தேடியதுடன், கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி மாலை 6.00 மணி வரை சுமார் 8½ மணி நேரம் நீடித்த போதிலும், ஆற்றின் நீரோட்டம் மற்றும் சேறு காரணமாக விநாயகர் சிலையோ அல்லது தங்கச்சங்கிலியோ கிடைக்கவில்லை. இதனால் ராமமூர்த்தி மிகுந்த ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் வீடு திரும்பினார்.
