LATEST NEWS
கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்ல தடை ஏன்..? ரீல்ஸ் மோகத்தால் பக்தர்களின் மன அமைதி கெடுகிறதா..? செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் அளித்த பரபரப்பு விளக்கம்.!!
கோவில்களில் ரீல்ஸ் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடை செய்யவும், அமைதியை நிலைநாட்டவுமே கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் மன அமைதிக்காகவும், அங்கிருக்கும் சிற்பங்களைக் கண்டு ரசிப்பதற்காகவுமே வருகை தருகிறார்கள் என்று தெரிவித்தார்.
ஆனால், சிலர் மற்ற பக்தர்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செல்போன்களைக் கொண்டுவந்து புகைப்படம் எடுப்பதும், ரீல்ஸ் வீடியோக்கள் செய்வதும் அதிகரித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதனால், ஆன்மிக நம்பிக்கையுடன் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதால், தற்போது தமிழகத்தில் உள்ள முதன்மையான கோவில்களில் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார். குறிப்பாக, ஆன்லைன் மூலம் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தப் பணி முழுமையடைந்த பின் தரிசனத்திற்கு வரும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து தரிசனம் செய்யக்கூடிய நிலை ஏற்படும் என்றும், அதன் பிறகே இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
