LATEST NEWS
என்னப்பா சொல்றீங்க..?! 360 டன் கோட்டைய கயிற வச்சு நகத்திட்டாங்களா..? ஜப்பான்காரங்க செஞ்ச பிரம்மாண்ட விஷயம்..! பாரம்பரிய ‘ஹிகியா’ தொழில்நுட்பத்தைக் கண்டு வியக்கும் உலகம்..!!
ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஹிரோசாகி கோட்டையின் முக்கிய பகுதியை மீண்டும் அதன் பழைய அடித்தளத்திற்கே கொண்டு செல்லும் பிரம்மாண்ட பணி நடைபெற்று வருகிறது. 1611-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1810-இல் சீரமைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம், ஜப்பானின் தேசிய கலாச்சார பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், 360 டன் எடையுள்ள கோட்டை கோபுரத்தை சுமார் 1,800 தன்னார்வலர்கள் கயிறுகளால் இழுத்து 2 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு வெற்றிகரமாக நகர்த்தியுள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு, கோட்டையின் கற்களால் ஆன அடித்தள சுவர் சேதமடைந்ததால், அதை சீரமைக்க கோட்டை 70 மீட்டருக்கும் அதிகமான தூரம் தற்காலிகமாக நகர்த்தப்பட்டது. சுவரில் இருந்த 2,185 கற்களும் சீரமைக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே நகர்த்துவதற்காக ஜப்பானிய பாரம்பரிய ‘ஹிகியா’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் கீழ் கோட்டையை பிரத்யேக தண்டவாளங்கள் மற்றும் ரோலர்கள் மீது நிறுத்தி நகர்த்துகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட தேர்வில் உலக நாடுகளிலிருந்தும் விண்ணப்பித்த சுமார் 8,000 பேரில் 1,800 பேர் தேர்வு செய்யப்பட்டு, 80 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு கயிறு மூலம் நகர்த்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆகஸ்ட் இறுதிக்குள் பொதுமக்களின் உதவியுடன் கோட்டையை மொத்தம் 5 மீட்டர் வரை நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் எஞ்சிய தூரம் இயந்திரங்கள் மூலம் நகர்த்தப்பட்டு, 2026 இறுதிக்குள் பழைய இடத்திற்கு கொண்டு வரப்படும். உள்புற சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, 2033-ஆம் ஆண்டில் இந்த வரலாற்று கோட்டை மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக முழுமையாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
