“சட்டப்பேரவையா… இல்லை தெருவில் நடக்கும் குழாய் அடி சண்டையா..? கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டாமா..?” சட்டமன்றக் கூச்சலுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சட்டப்பேரவையா… இல்லை தெருவில் நடக்கும் குழாய் அடி சண்டையா..? கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டாமா..?” சட்டமன்றக் கூச்சலுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்..!!

Published

on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பிரச்சார இயக்கம் தொடங்கிய சூழலில், சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பெ.சண்முகம் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் லாவணி கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் என்ற பெயரில் விவாதத்தைத் தொடங்கிவிட்டு, அதை ஒதுக்கி வைத்துவிட்டு கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என்று 5, 10 ஆண்டுகளுக்கு முன்பான சம்பவங்களை மட்டுமே பேசி நேரத்தை வீணடிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை என்றும், ஆனால் அத்தகைய உறுப்பினர்களுக்கு வாய்ப்பே தரப்படாத நிலைமை சட்டமன்றத்தில் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். சபாநாயகர் நடுநிலையோடு நடந்து கொள்கிறார் என்று சிலர் பாராட்டினாலும், இரு தரப்பினர் பேசுவதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது மட்டுமே நடப்பதாக விமர்சித்தார். அதேவேளையில், சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகவும், இதன் மூலம் மக்கள் தங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரடியாகத் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

கோடிக்கணக்கான மக்கள் சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வோடு உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சட்டமன்ற நேரத்தை இப்படி வீணடிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சிப்பதாகத் தெரிவித்தார். சபாநாயகர் இதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும், தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பிக் கூச்சல் போடுவது, சவால் விடுவது எனத் தெருவில் நடக்கும் குழாய் அடி சண்டையைப் போல அவையை மாற்றுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in