LATEST NEWS
“எங்களை பாக்காம வேலைய தொட முடியாது..!” ஆடியோவில் ரூ .25,000 பேரம்… நேரில் மழுப்பல் விளக்கம்..!!
கோவை மாநகராட்சியில் தி.மு.க. உள்ளாட்சிப் பிரமுகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்டு, மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள், என் பெயரைச் சொல்லுங்கள்” என்று முதல்வர் விஜய் துணிச்சலுடன் அறிவித்தபோதிலும், கறைபடிந்த அதிகாரிகளும் உள்ளாட்சிப் பிரமுகர்களும் அதனை அமல்படுத்தத் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. த.வெ.க. ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்ற நோக்கில் தி.மு.க.வினர் செயல்படுவதாகவும், கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட ‘ஒர்க் ஆர்டர்’களுக்குக் கூட பணிகள் செய்ய முடியாமல் 200-க்கும் மேற்பட்ட பணிகள் பெண்டிங்கில் உள்ளதாகவும் ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெளிப்படையான டெண்டர் முறையை வரவேற்கும் அதே வேளையில், 2 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று மேயர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக லஞ்சம் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர். மேயரின் சொந்த வார்டிலேயே சிமென்ட் சாலை பணி நிலுவையில் உள்ளதுடன், பிற கவுன்சிலர்களும் அதிகாரிகளின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒவ்வொரு பணிக்கும் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்காவிட்டால் பணிகளைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தி.மு.க.வினர் பணம் கொடுக்கும் பணிகளுக்கு மட்டுமே கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து மேயர் ரங்கநாயகியிடம் கேட்டபோது, தனது வார்டில் பணிகள் நடப்பதாகவும், ஸ்லம் ஏரியாவில் வடிகால் கட்ட வேண்டியிருப்பதாலேயே சிமென்ட் ரோடு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி, யாரிடமும் பணம் கேட்கவில்லை என மறுத்தார். அதேபோல, மாநகராட்சி 57வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாந்தாமணி லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் சாந்தாமணி, கவுன்சிலரை பார்க்கலையே. என்னை கவனிங்க. உடனே எந்த இடத்தில் கொட்டணும்னு சொல்றேன். எங்களை பார்த்துட்டு தான் வேலையே செய்வாங்க. 25,000 ரூபாய் கொடுங்க என்று கூறியுள்ளார்.இது குறித்து சாந்தாமணியிடம் கேட்டபோது, ஆரம்பத்தில் 2 சதவீதம் பணம் கொடுத்ததாகவும் செந்தில் பாலாஜி வந்த பிறகு அது நின்றுவிட்டதாகவும் தெரிவித்து, தான் யாரிடமும் பணம் கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
