LATEST NEWS
“என்கிட்டயே லஞ்சம் கேக்குறீங்களா..?” ரூ.500 நோட்டுகளைக் கொட்டி தி.மு.க. மாமன்ற உறுப்பினர் அதிரடி போராட்டம்.. நெல்லை வட்டாட்சியர் அலுவலக வாசலில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் தச்சநல்லூர் மண்டலத் தலைவரும், தற்போதைய மாமன்ற தி.மு.க. உறுப்பினருமான சுப்பிரமணியன், நெல்லை சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் உள்ள தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்து சர்வேயர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தபோதிலும், வட்டாட்சியர் அதற்கு லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தனது விண்ணப்பத்தை வட்டாட்சியர் தள்ளுபடி செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவுப் பகுதியில் துணியைப் பரப்பி, அதில் ரூ.500 நோட்டுக் கட்டுகளைக் கொட்டி சுப்பிரமணியன் என்பவர் நடத்திய அதிரடிப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட்டாட்சியர் தன்னிடம் லஞ்சமாகக் கேட்ட தொகையையே இவ்வாறு கொண்டுவந்து கொட்டியதாகக் குற்றம் சாட்டிய அவர், நாள்தோறும் ரூ.1 லட்சம் லஞ்சப் பணம் இன்றி வட்டாட்சியர் வீடு திரும்புவதில்லை என்று பகிரங்கப் புகாரை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், நெல்லை வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பட்டா மாறுதல் மனுக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் முழுமையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
