LATEST NEWS
அண்ணே..! எங்க ஆட்சியில ஆக்டிங் கிடையாது, ஆக்ஷன் மட்டுமே… 10 நிமிஷத்துக்கு முன்னாடி உங்ககிட்ட இருந்து ஒரு டெக்னிக் கத்துக்கிட்டேன்… திமுக-விற்கு தவெக அமைச்சர் ரமேஷ் கொடுத்த நறுக்..!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே வேளாண் நிதி ஒதுக்கீடு மற்றும் விவசாயத் திட்டங்கள் குறித்து காரசாரமான அதே வேளையில் சுவாரசியமான விவாதம் நடைபெற்றது. திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர்; ஆனால், தவெக அரசு கடந்த ஆட்சியை விட வேளாண் துறைக்கு ரூ.279 கோடி குறைவாக நிதி ஒதுக்கியுள்ளது” எனக் குற்றம் சாட்டினார். இதற்கு தவெக தரப்பில் பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக எம்.ஆர்.கே சிறந்த திரைக்கதை எழுதியுள்ளார்” என்று கூறி, முந்தைய திமுக அரசின் வாக்குறுதிகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினார்.
இந்த விவாதத்தின் போது திமுகவினர் ‘முரசொலி’ படித்து வந்தவர்கள், தவெகவினர் ‘படம்’ பார்த்து வந்தவர்கள் என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வம்புக்கு இழுக்க, “எங்கள் ஆட்சியில் ஆக்டிங் கிடையாது, ஆக்ஷன் மட்டுமே” என்றும், தவெக அமைச்சர் பேசும் போதே அவர்களின் அரசியல் ‘டெக்னிக்’ தெரிகிறது என்றும் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த தவெக அமைச்சர் ரமேஷ், “அந்த டெக்னிக்கை 10 நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன்” என்று சாதுரியமாகப் பதில் அளித்து அவையைச் சிரிக்க வைத்தார்.
மேலும் விவாதத்தின் தொடர்ச்சியாக, அமைச்சர் ரமேஷை நோக்கி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் “மாண்புமிகு சாமி அமைச்சர்.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்..” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினார். இதைக் கேட்டதும் அவையிலிருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கி, குலுங்கிச் சிரித்தார். தொடர்ந்து, “உண்மையா, பொய்யா என தெரியாமல் சமூக வலைதளங்களில் உலா வரும் அமைச்சர் ரமேஷின் ரீல்ஸ் கன்டென்டை அப்படியே எடுத்து இங்குப் பேசுகிறார்கள்” என்று எம்.ஆர்.கே விமர்சித்த போதும், முதலமைச்சர் விஜய் அதை சற்றும் கோபப்படாமல் ரசித்து, சிரித்த முகத்துடனேயே இறுதிவரை அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த சுவாரசியமான அரசியல் விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
