LATEST NEWS
“ஜெயிச்சா இபிஎஸ்… தோத்தா நாங்களா?” அவரால ஒரு தேர்தல்ல கூட ஜெயிக்க முடியல… எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்கமாக பாய்ந்த சி.வி.சண்முகம்..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்கு இபிஎஸ் தான் காரணம் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள்; ஆனால் தோல்வியடைந்தால் மட்டும் அதற்கு மாவட்ட செயலாளர்கள் எப்படி காரணமாக முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். வலுவான மற்றும் வலிமையான தலைமை வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவரைத் தேர்வு செய்தோம், ஆனால் அவர் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அதிமுகவின் தொடர் தோல்விகளுக்குக் கட்சியின் தலைமை முறையான கூட்டணி அமைக்காததும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதுமே முதன்மைக் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் அதிமுக முற்றிலும் பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல தொகுதிகளில் செல்வாக்கை இழந்துள்ளார் என்றும், தன் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்காகவே மாவட்டச் செயலாளர்கள் மீது தற்போது வீண் பழி சுமத்தப்பட்டு வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
