LATEST NEWS
“பெண்ணுக்கு மட்டும் தான் கற்பு பறிபோகுதா..?” ஆணுக்கு இல்லையா.? இதுபோன்ற வார்த்தைகளை பேரவையில் பயன்படுத்தலாமா? இபிஎஸ் பேச்சால் பரபரப்பு…!!
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான இன்றைய விவாதத்தின் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசுகையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவருமே அவையில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளனர். பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாலியல் வன்புணர்வு என்ற வழக்கமான சட்டப்பூர்வ வார்த்தைக்குப் பதிலாக, மாற்றுச் சொல் ஒன்றை அவையில் பயன்படுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திய அந்த வார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவையிலேயே மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் எழுந்து நின்று, “பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு பறிபோகிறதா? ஆணுக்கு இல்லையா? சட்டமன்றப் பேரவை போன்ற ஒரு உயரிய இடத்தில் இதுபோன்ற பிற்போக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா?” என்று மிக ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், தூத்துக்குடி விவகாரம் தொடர்பாகப் பேசிய போது தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் இதே போன்றதொரு வார்த்தையைத்தான் பேரவையில் பயன்படுத்தியிருந்தார் என்பதையும் சி.பி.எம். எம்.எல்.ஏ. மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினார்.
சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினரின் இந்த நியாயமான மற்றும் காட்டமான எதிர்ப்பைத் தொடர்ந்து அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தவறை உணர்ந்த பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உடனடியாகத் தங்களது பேச்சுக்கு அவையில் வருத்தம் தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய அந்தத் குறிப்பிட்ட வார்த்தைகள் சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டன.
