LATEST NEWS
“யாகாவராயினும் நா காக்க..!” திருக்குறள் சொல்லி உதயநிதிக்கு பகிரங்க டோஸ் கொடுத்த வைகோ.. இணையத்தில் தீயாய் பரவும் பதிவு..!!
‘யாகாவராயினும் நா காக்க’ எனும் திருவள்ளுவரின் குறள் நெறியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் மீது மலிவான இழிமொழிகளையும் நாகரிகமற்ற வார்த்தைகளையும் வீசுவது, உதயநிதி ஸ்டாலின் வகித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியமான பொறுப்பிற்குச் சிறிதும் உகந்தது அல்ல என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரிப் பிரச்சினைக்காகத் திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசிய பேச்சுக்கள், அவரை ஒரு பொறுப்புள்ள தலைவராகக் காட்டாமல் நாலாந்தரப் பேச்சாளர்களின் பட்டியலில் கொண்டு சேர்த்து இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வைகோ காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுவெளியிலும் அரசியல் மேடைகளிலும் பேசும்போது வார்த்தைப் பிரயோகங்களில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
