LATEST NEWS
“புடவையோட போட்டோ அனுப்பு…!””உன்கிட்ட கேட்காம வேற யார்ட்ட கேட்பேன் …!”டி.ஐ.ஜி சசிமோகன் காட்டிய அதிரடி ஆக்ஷன்…!வெறும் சஸ்பெண்ட் மட்டும் போதாது! கிரிமினல் கேஸ் போடுங்க.. பழனி சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக வெடிக்கும் மக்கள் கொந்தளிப்பு…!
புகார் அளிக்க வரும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விவகாரத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மீது அடுத்தடுத்து புதிய புகார்கள் வரிசையாக எழுந்துள்ளன. தன்னிடம் உதவி மற்றும் பாதுகாப்பு கோரி வந்த பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில், இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகனால் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டார். இந்நிலையில், “உன்னிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது, புடவையுடன் புகைப்படம் அனுப்பு” என அவர் பெண்களிடம் அநாகரிகமாகப் பேசிய வாட்ஸ்அப் சாட்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்திற்குத் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்துப் பாதுகாப்பு தேடி வரும் பெண்களிடம் அநாகரிகமாகப் பேசுவதையும், அவர்களிடம் எல்லை மீறி நடப்பதையும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஒரு தொடர்கதையாகவே வைத்திருந்துள்ளார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர் வாட்ஸ்அப் மூலம் செய்த அநாகரிக உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்டுகள் ஆதாரங்களாக வெளிவந்துள்ளன. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியே இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள அந்த வாட்ஸ்அப் உரையாடல்களில், “உனது புடவையுடன் கூடிய புகைப்படத்தை எனக்கு அனுப்பு” என்று ராஜகோபால் கேட்க, அதற்கு அந்தப் பெண் பயந்துபோய் மறுப்புத் தெரிவித்துள்ளார். உடனே சற்றும் லட்சியம் செய்யாமல், “உன்னிடம் கேட்காமல் நான் வேறு யாரிடம் கேட்பது” என்று அதிகாரத் தோரணையில் அநாகரிகமாகப் பேசிய விபரங்கள் அப்படியே அம்பலமாகியுள்ளன. பாதுகாப்பு கோரி வரும் பெண்களைத் தனது காம இச்சைக்கு இணங்க வைக்க முயற்சி செய்த இந்த அதிகாரியின் முகத்திரை தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இந்த ஒரு பெண் மட்டுமல்லாமல், காவல் நிலையத்திற்குப் பல்வேறு புகார்கள் தொடர்பாக வந்த இன்னும் பல ஏழை, எளிய பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் சக காவலர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது. சாமான்ய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய காவல்துறையினருக்குக் களங்கம் விளைவித்த இந்த அதிகாரி மீது, வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் போதாது என்றும், அவர் மீது துறை ரீதியான கடுமையான சட்டப்பூர்வமான கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
