LATEST NEWS
விடிஞ்சா ஒரு விக்கெட் காலி…!கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடந்த அந்த ரகசிய மீட்டிங்…!எடப்பாடி வீட்டு வாசலில் காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள்.. அதிமுகவில் அடுத்த ஆட்டம் ஆரம்பம்…!! எடப்பாடி போட்ட ஒற்றை ஸ்கெட்ச்.. நிலைகுலைந்த சிவி சண்முகம்…!
தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் கடும் பரபரப்பை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறமும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையிலான அணி மறுபுறமும் என கட்சி இரண்டாகப் பிரிந்து மோதி வந்த நிலையில், இப்போது நிலைமையே தலைகீழாக மாறி மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கிய எம்.எல்.ஏ.க்கள், தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குப் படையெடுத்து ஆதரவு தெரிவித்து வருவது வேலுமணி முகாமை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, அதிமுகவின் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, வேலுமணி மற்றும் சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் கட்சிப் பொறுப்புகளும், மாவட்ட செயலாளர் பதவிகளும் அதிரடியாகப் பறிக்கப்பட்டன. இதனால் வெறும் எம்.எல்.ஏ.க்களாக மட்டுமே சுருங்கிப் போன அவர்கள், தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் கடும் நிபந்தனைகளால் அந்த அமைச்சர் கனவு முற்றிலும் கலைந்து போனது. இந்த ஏமாற்றம் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியதால், அவர்கள் எடப்பாடி பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.
இதன் விளைவாக, ஒரே நாளில் மூன்று முக்கிய எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்குத் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு எடப்பாடி பக்கம் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரிபாஸ்கரும் எடப்பாடி தரப்பில் இணைந்துள்ளார். இதனால், இதுவரை 25 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான அணியாகச் செயல்பட்டு வந்த வேலுமணி தரப்பின் பலம் தற்போது 22 ஆகச் சரிந்துள்ளதுடன், எடப்பாடியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
எம்.எல்.ஏ.க்களின் இந்தத் தொடர் வெளியேற்றம் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பை அரசியல் ரீதியாகப் பெரும் தனிமைக்குள்ளாக்கியுள்ளது. இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியின் வாசலில் காத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனித்து விடப்பட்டுள்ள எஸ்பி வேலுமணி, தனது இருப்பைத் தக்கவைக்கவும் பலத்தை நிரூபிக்கவும் பொதுக்குழுவைக் கூட்டவோ அல்லது சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கவோ தீவிர அதிரடி வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மாற்றங்கள் தமிழக அரசியலில் அடுத்தடுத்து என்ன திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
